கரோனா ஊரடங்கால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் வழக்கமாக நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு கல்வித்துறை அறிவித்தது.
இருப்பினும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில், 11ஆம் வகுப்பில் மீதமுள்ள தேர்வு மற்றும் ஆரம்பிக்கப்படாத 10ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது.
நீண்ட நாள்களாக அரசிடமிருந்து எவ்வித அறிவிப்பும் வராததால் பொதுத்தேர்வு நடைபெறாது என்றும், சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் 11ஆம் வகுப்பிற்கு மீதமுள்ள பொதுத் தேர்வும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என அறிவித்து கால அட்டவணையையும் கல்வித்துறை அறிவித்தது.
இந்தப் பொதுத் தேர்வுகளை எழுத மாணவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வந்தாலும் பெற்றோர்களிடையே கரோனா நோய்த் தொற்று குறித்த அச்சங்கள் தென்பட்டன. அதுமட்டுமின்றி ஊரடங்கும் நீட்டிக்கப்படுமா என்ற அச்சமும் நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தது. எவ்வகையில் நியாயம் என சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு சில எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உடனடியாக ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தினர் அவரவர் வீட்டின் முன்பு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முகக் கவசங்கள் அணிந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறுத்த வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டமானது கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, காரமடை, நடுப்பாளையம், சிங்கை போன்ற ஆறு பகுதிகளில் நடைபெற்றது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் தொடக்கம்!