கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருப்பூர் பகுதியைச் சார்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்த நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சிலர் திருப்பூரைச் சேர்ந்த மாணவரை ராகிங் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள், இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூரைச் சேர்ந்த மாணவரை, அவர் தங்கி இருந்த அறையிலிருந்து, சீனியர் மாணவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று மிரட்டித் தாக்கி உள்ளனர்.
அப்போது அவரது தலையை டிரிம்மர் மெஷினைப் பயன்படுத்தி மொட்டையடித்துள்ளனர். நேற்று காலை 5.30 மணி வரை அறையில் அடைத்து வைத்துத் தாக்கிய அவர்கள், மாணவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டதுடன், மது குடிக்கப் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருப்பூரிலிருந்து கல்லூரிக்கு வந்த பெற்றோர், மாணவரை நேரடியாகப் பார்த்து நடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்துள்ளனர். பின்னர், இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த பெற்றோர், நேரடியாக பீளமேடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் சீனியர் மாணவர்களான இரண்டாம் ஆண்டு படிக்கும் இருவர், மூன்றாம் ஆண்டு படிக்கும் இருவர் மற்றும் இறுதியாண்டு படிக்கும் மூவர் என மொத்தமாக 7 பேரை பீளமேடு போலீசார் கைது செய்து அவர்கள் மீது, சட்டவிரோதமாகக் கூடுதல், ராகிங் சட்டப் பிரிவு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கோவையில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா; அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!