கோயம்புத்தூர் சிவானந்தா காலனி பகுதியில் கோயம்புத்தூர் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது பேசிய அவர், "இனிவரும் காலங்களிலும் தனித்துதான் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான். சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்கிற திமுக சிறுபான்மையினருக்குத் தேர்தலில் குறைவான இடங்களே கொடுத்துள்ளது. திருடன், கூட்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத் திருடன், திருடன் எனக் கத்துவதுபோல, தானும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பி டீம் என திமுக சொல்கிறது.
திமுக போன்ற நாடகக்காரர்களை உலகத்தில் பார்க்க முடியாது. எத்தனை முறை நட்டா வந்தாலும், பாஜகவின் ஓட்டு நோட்டாவிற்குக் கீழ்தான் இருக்கும். நாம் தமிழருக்கு வாக்களிப்பதால் பாஜக வந்துவிடும் என அஞ்சும் கோழைகள் வாக்களிக்க வேண்டாம்.
நாங்கள் இருக்கும்வரை பாஜக வராது என நம்புபவர்கள் எனக்கு வாக்களியுங்கள். பாஜகவுடன் அதிமுக நல்ல உறவு கொண்டுள்ளது. திமுக கள்ள உறவுகொண்டுள்ளது. தமிழன் உடம்பில் படர்தாமரை வளருமே தவிர, தமிழ் நிலத்தில் தாமரை மலராது" என்று கூறினார்.