கோயம்புத்தூர்: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் வரும் போது மட்டும் கேஸ் விலை 200 எப்படி குறைகிறது? இத்தனை நாள் மக்கள் அவதிப்பட்டதை ரசித்துக் கொண்டு இருந்தீர்களா? இதை இலவசம் என எடுத்துக் கொள்வதா?" என்று கேள்வி எழுப்பிய சீமான். தேர்தல் அரசியலை
விட்டு விட்டு மக்களுக்கான அரசியலுக்கு அரசியில் கட்சிகள் வர வேண்டும் என பேசினார்.
மக்களுக்கான கல்வி, மருத்துவ மேம்பாடு, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, முன்னேற்றம், மின்சாரம், சாலைவசதி, குடிநீர் போன்றவற்றை மேம்படுத்தல் குறித்து எந்த அரசியல் கட்சிகளைக் கவனம் செலுத்துமாறு சொன்ன சீமான், அரசியல் கட்சிகள் அனைத்தும் அதானி, அம்பானி போன்றவர்களில் நிறுவனத்தைப் போலச் செயல் படுவதாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய சீமான், திமுக ஒரு அரசியல் கட்சி அல்ல அது குடும்ப சொத்து என விமர்சித்துப் பேசினார். அதிமுகவும் அதே போன்ற நிலையில் உள்ளதாக கூறிய அவர், எடப்பாடியைத் தொடர்ந்து அவரது மகன் மிதுன் தலைமை தாங்குவார், அவரை தொடர்ந்து அவருடைய மகன் தலைமையில் இருப்பார் என் குற்றம் சாட்டினார்.
குடிவாரியான கணக்கெடுப்பு அவசியம்: மேலும், "ஒடுக்கப்பட்ட மக்கள் எதன் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் ஆகியவற்றிலிருந்து புறக்கணிக்கப்பட்டார்களோ, அதன் அடிப்படையில் அம்மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இட ஒதுக்கீடு, தற்போது அது அந்த நிலை உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார் சீமான்.
கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் அனைத்து சமுதாய மக்களுக்குச் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றால் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறிய சீமான், இந்த கணக்கெடுப்பு முறைக்கு வந்து விட்டால் எல்லாருக்கும் கிடைக்க வேண்டியது சரியாக கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் அதன் அடிப்படையில் மக்களுக்குச் சரியான கல்வி, அதற்கேற்ப வேலை, அதற்கேற்ப வருமானம் என வாழ்க்கை அமைந்து விட்டால் மக்கள் சாதியின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்தார். இந்த நிலையை உருவாக்கக் குடி ரீதியான கணக்கெடுப்பை நிச்சயம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
காவிரியைத் தர மறுக்கும் அரசுக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும்: காவிரி தண்ணீர் தர மறுக்கிறது காங்கிரஸ், ஆனால் அந்த அரசுக்குத் தேர்தலில் வாக்களிக்கச் சொல்லும் இந்த அரசு, ஒரு வேலை அவர்கள் ஆட்சி அமைத்தால், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெற்றுத் தருவது குறித்து உறுதி அளிக்க முடியுமா? பின் ஏன் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு தர வேண்டும்?" எனக் கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து, "காவிரி பிரச்சனையில் உரியத் தண்ணீரைப் பங்கிட்டு வழங்கினால், தேர்தலில் பங்கீடு வழங்கப்படும் இல்லையென்றால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படும் என்று கூறினால், இந்த நாட்டு மக்களின் நலனுக்காகச் சிந்திக்கிறீர்கள் என்று கூறலாம்.
அதை விட்டுவிட்டு இந்தியாவைக் காப்பாற்றுவோம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது" என விமர்சித்துப் பேசினார்.
மோடியை எதிர்த்து நானே நிற்பேன்: "இவ்வளவு பெரிய நாட்டை மோடியிடம் ஒப்படைத்து, நாட்டை நாசமாக்கியதன் பின், ராமேஸ்வரத்தில் நின்றால், அவருக்கு எதிராகத் தேர்தலில் நானும் நிற்பேன்" என்று தெரிவித்தார். மேலும் பாஜகவை எதிர்த்து திமுக நேரடியாகப் போட்டியிடாது என்று கூறிய சீமான், கடந்த தேர்தலில் தூத்துக்குடியைத் தவிர மற்ற எந்த இடங்களிலும் பாஜகவை எதிர்த்து, திமுக நேரடியாகப் போட்டியிட்டு வெல்லவில்லை என கூறினார்.
மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதைப் போன்ற நடவடிக்கையைத் தான் திமுக மேற்கொள்ளும் என கூறிய சீமான், ராமேஸ்வரத்தில் பாஜகவை எதிர்த்து திமுக வலுவான வேட்பாளரை நிறுத்தி நேரடியாகப் போட்டியிட்டால் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்று, திமுகவிற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குப்பை குவியல் போல் கிடக்கும் ஸ்மார்ட் கடைகள்.. ரூ.13.5 கோடி வீணாக காரணம் என்ன?