கோயம்புத்தூர்: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசி ஆண்டவர் கோயில், கோலமாவு மலைப்பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. அப்போது, சிறுத்தையை கண்காணிக்க வனத்துறை சார்பில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது.
ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. பின்னர், டிசம்பர் மாத இறுதியில் சுகுணாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இருப்பினும், சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. பின்னர், சிறுத்தை நடமாட்டம் குறித்த வதந்திகள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று (ஜனவரி 17) காலை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை இருந்துள்ளது.
இந்த குடோனில் தனியார் நிறுவனத்தின் பழைய பொருட்களை வைத்துள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து வந்த ஊழியர் ஒருவர் குடோனிற்கு சென்று பார்த்த போது சிறுத்தை குடோனில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தது. இதனை கண்டவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர், குடோன் கதவை மூடிவிட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், மதுக்கரை வனச்சரகர் சந்தியா உள்ளிட்ட வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குடோனில் சென்று பார்த்த போது சிறுத்தை அங்கு இருப்பது உறுதியானது. பின்னர், 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து அந்த குடோன் முழுவதும் இருந்த ஓடுகளில் வலை விரித்தனர்.
குடோனில் இருந்து வெளியேற இரண்டு வழிகள் இருந்தன. அந்த இரண்டு வழிகளிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்தனர். அதனைச் சுற்றியும் வலை அமைக்கப்பட்டது. சிறுத்தை தப்பிச் செல்லாமல் இருக்க அந்த குடோன் முழுவதும் வலையால் மூடப்பட்டு இருந்தது. பின்னர், வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஷ், உள்ளிட்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க முடியுமா? என ஆய்வு செய்தனர். ஆனால், சிறுத்தை இருக்கும் பகுதியில் மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் இருந்தது.இதனால், சிறுத்தை தானாகக் கூண்டில் சிக்கும் வரை காத்திருக்கலாம் என அலுவலர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, சிறுத்தை கூண்டில் சிக்குமா? என இரவு முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறை அலுவலர்கள், வன ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை குடோனில் இருப்பது குறித்த தகவல் காலை முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதை அடுத்து, குடோனை சுற்றி இருந்த குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் சிறுத்தையை காண குவிந்தனர். அவர்களைப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இது குறித்து வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறுகையில், இந்த சிறுத்தை எட்டிமடை உள்ளிட்ட பகுதியில் சுற்றி வந்தது. இதனைப் பிடிக்கக் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், சிக்கவில்லை. இந்நிலையில், தற்போது தனியார் குடோனில் சிறுத்தை புகுந்துள்ளது. இங்கு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிப்பதில் சிக்கல் உள்ளது.
இதனால், கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுத்தையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்நேரத்திலும் சிறுத்தை பிடி பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிகிறேன்; தனுஷ்