கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அதிகம் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் வேலன் காபி என்ற தனியார் டீ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) இந்த கடையில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகம் கடைக்கு ரூ.20,000 அபராதம் விதித்தது.
அதனை தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 12) அப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து கடையின் ஊழியர் மோகன்ராஜ் கூறுகையில் ’’இரு தினங்களுக்கு முன்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று அதிகாரிகள் வந்து கடைக்கு சீல் வைத்து விட்டனர். இதனால், இங்கு பணிபுரியும் 35க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விற்பனைக்கு இருந்த தின்பண்டங்கள் அனைத்தும் வீணாகி விட்டது. வணிக வளாக பகுதிகளில் அதிகளவு கூட்டம் சேரும் பகுதிகளில் அலுவலர்கள் போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர்’’ எனக் கூறினார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு