கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த சபீர், 12ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி கோபிகாவை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் வெளியில் சுற்றிப் பார்ப்பதற்காக வால்பாறையை அடுத்துள்ள அருவிக்கு வந்துள்ளனர். அப்போது, தனது மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக மாணவி கூறியதையடுத்து, சபீர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், சபீர் மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு வால்பாறை அருகேயுள்ள வரட்டுப் பாறை வனப்பகுதியில் சடலத்தை வீசிச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் கேரளாவுக்குத் தப்பித்துச் செல்வதற்காக வாகனத்தில் சென்றிருக்கிறார். அவர் வாகனம் சென்ற வழியில் காடம்பாறை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வாகனத்தைச் சோதனையிட்ட காவல் துறையினர் சபீரை பிடித்து விசாரிக்கும்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் முடிவில் சபீர் பள்ளி மாணவியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கேரள மாநில காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எர்ணாகுளம் காவல் துறையினர் பள்ளி மாணவியின் கொலையில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்