வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றானது சூரியகிரகணம். இன்று இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தென்பட்டது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகை உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கோவை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியகிரகணம் தெரியவில்லை.

மதுக்கரை பகுதியில் மட்டும் சில நொடிகள் கிரகணத்தை பார்க்க முடிந்தது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சூரிய கிரகணத்தை பார்க்க இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் சூரிய கிரகணத்தை காண வந்த பொதுமக்களும், மாணவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்தோம். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. மேகமூட்டத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அடுத்த சூரிய கிரகணத்தை காண 12 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என மாணவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி வெங்கடேசன் கூறுகையில், "இன்றைக்கு வானில் ஒரு அற்புதமான காட்சியை பார்த்திருக்கிறோம். வளைய சூரிய கிரகணம் எப்படி உருவாகிறது என்பதை நேரடியாக பார்த்துள்ளோம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக ஊட்டி, கரூர் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரிந்தது. கோவையில் சில வினாடிகள் மட்டுமே கிரகணம் தெரிந்ததாக கூறப்படுகிறது.
அழகாக வானில் சூரியனை சுற்றியிருக்கும் நெருப்பு வளையம் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என மக்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. அறிவியல் குறித்து ஒரு நம்பிக்கையும், அறிவியலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த கிரகணம் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: திருச்சியில் 3 நாட்களுக்கு மாபெரும் கலைகொண்டாட்டம்!