பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ் சர்க்கார்பதி, மலசர் இன மலைவாழ் மக்கள் நாற்பது குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள், பல தலைமுறையாக சர்க்கார்பதி பகுதியை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஒரு பகுதியினர் இடப்பற்றாக்குறையால் காட்டூர் கணல் மேல் அடர்வனப்பகுதியில் உள்ளனர்.
இவர்கள் சேத்துமடை, வேட்டைக்காரன் புதூர், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பண்ணைகளில் கூலி வேலை செல்கின்றனர். ஒரு சிலர் வனத் துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடுகள் தகர கொட்கைகள், செம்மண்ணால் பாதி வீடு கட்டி தென்னை ஓலைகள் மூலம் குடிசை அமைத்துப் பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.
கழிப்பிட வசதி கூட இல்லாததால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வன விலங்குகள் அதிகம் உள்ள பகுதியினால் இவர்களுக்குத் தொகுப்பு வீடும், அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.