கோயம்புத்தூர்: திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய சசிகலா கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அழைத்துள்ளார்கள். சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். வாகன பிரசாரம் பொதுக்கூட்டம் போன்றவை உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக இணைய வாய்ப்பு உள்ளது. ஒருங்கிணைக்கும் முயற்சி நன்றாகப் போகிறது. மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பில் நிதி நிலைமை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக வாக்குறுதியில் தெரிந்தே கொடுக்க முடியாததை கொடுக்கிறேன் என சொல்லியது மக்களை ஏமாற்றும் செயல்.
அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது கட்சி எப்படி இருந்தது. இப்போது அந்த நிலைமை இருக்கிறதா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது பணி. மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். கட்சி செயல்பாடுகளை அரசாங்கத்தின் துணையாக வைத்துக் கொள்கின்றனர். திமுக ஆட்சியில் அரசு வேலைகள் ஆமை வேகத்தில் போகிறது, அதை கவனிப்பதும் இல்லை.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர மன்னிப்புக் கடிதம் கொடுத்ததாக தெரியவில்லை. ஓபிஎஸ்-ன் பாஜக கூட்டணி கருத்து அவரது விருப்பம், அவரது நிலைப்பாடு. ஓபிஎஸ் உடன் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான சந்திப்பு விரைவில் உள்ளது. தமிழ்நாடு அரசு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 96ல் இருந்து அமலாக்கத்துறை விசாரணைகள் நடைபெறுகிறது. என்னை விசாரித்த போதெல்லாம் நான் ஒத்துழைப்பு கொடுத்தேன்.
பா.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை விசாரித்தனர். 11:30க்கு கைது செய்தனர். ஆனால் என் குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர். அப்போது திமுக அரசு எங்கள் குடும்பத்தை சிறையில் அடைத்தனர். அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அதே திமுக அரசில் அமலாக்கத்துறை விசாரணையின் போது பெண் அதிகாரியை அடிக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயம், மத்திய அரசிலிருந்து வரும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயமா?. அமைச்சராக இருப்பவர்களே இப்படி வழிகாட்டு முறைகளை காண்பித்தால் மற்றவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும். சுதந்திரத்திற்குப் பின்பு தனிப்பட்ட நபருக்காக முதலமைச்சர் அமர்ந்து பேசுவது இதுதான் முதல் முறை. மக்கள் பிரச்னையை பின்னுக்குத் தள்ளி விட்டனர். அவர்கள் பிரச்னையைத் தான் பார்க்கின்றனர். இந்த மாதிரி விஷயங்களில் சும்மா இருக்க முடியாது. நான் அம்மாவிடம் இருந்தவர். ஆகவே நான் கேட்பேன்.
உங்கள் மீது தவறில்லை என்றால் சொல்லுங்கள். உடனே மத்திய அரசின் மீது குறை சொல்கிறீர்கள். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா... வந்த மூன்று வருடத்தில் எதையும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கா? பெண்கள் வெளியே வர முடியவில்லை. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் பார், 24 மணி நேரமும் விற்பனை. மேலும் லைசன்ஸ் இல்லாத பார்கள் நடைபெறுகிறது.
திமுக அரசை பேச பத்திரிகைக்காரர்கள் கூட பயப்படுகின்றனர். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்ட நீங்கள் விவசாயம் சம்பந்தமான முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும் அல்லவா. காவிரி தண்ணீர் பிரச்னையில் ஜூன், ஜூலை 40 டிஎம்சி தண்ணீர் வர வேண்டும். ஆனால் 3 டிஎம்சி கொடுத்துள்ளனர். பயிர்கள் காத்திருக்குமா?... மேட்டூரில் தண்ணீர் எவ்வளவு இருக்கு என்பதை தெரியாமல், இஷ்டத்திற்கு பப்ளிசிட்டி செய்கிறார்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் வந்து விடும் என பயிரை போட்டு விட்டனர். ஆனால் செடி கருகும் நிலையில் உள்ளது. மேட்டூரிலும் தண்ணீர் குறைவாக உள்ளது. இதில் விவசாயி நிலைமை என்னவாகும். கர்நாடகாவில் கூட்டணிக் கட்சி தான் உள்ளது. கூட்டணி தர்மத்தை பார்த்தால் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. கொடுக்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் செல்லுங்கள்.
ஜெயலலிதா போல சுப்ரீம் கோர்ட் சென்று செயல்பட வேண்டும். எங்களுக்கு தேவை மக்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்வோம். அம்மாவை போலவே எனது பயணம் இருக்கும். எந்த இடத்தில் சேர்கிறார்களோ, சேரும் இடம் ஒரு கணக்கு உள்ளது. அவங்க என்ன சொல்றாங்களோ... அதை சொல்கிறார்.
முத்துசாமி நல்ல மனிதர். கள்ளத்தனமாக மது விற்கும் வேலையை செய்கின்றனர். பிடிஆர் 8 மாதத்திற்கு முன்பு சொன்னார். டாஸ்மாக்கில் பணம் வருகிறது, ஆனால் எங்கே செல்கிறது எனத் தெரியவில்லை என்று. நிதி அமைச்சர் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும். அதை நான் செய்து காட்டுவேன்.
அரசாங்க ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. 10 முதல் 15 நாள்கள் ஆகிறது. காவல்துறையில் சம்பளம் 20 தேதியாகிறது. வெளியில் போகும் பணத்தை நிறுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். நிர்வாகத்திறமை இல்லாத அரசாக உள்ளது திமுக. திமுகவிற்கு வாக்களித்ததால் மக்கள் மிகவும் சிரமாக உள்ளனர். அது மாற வேண்டுமென்றால், எங்க ஆட்சி வந்தால் மட்டுமே முடியும். தமிழ்நாட்டின் சிறந்த எதிர்க்கட்சி அதிமுக தான்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியா சார்பில் யோகா போட்டியில் பங்கேற்க தாய்லாந்து பறக்கும் தஞ்சை சிறுவன்!