கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், ரூபினி தம்பதிகளின் மகள் தேவிஸ்ரீ(3). இந்த குழந்தை நேற்று (திங்கட்கிழமை) காலை சரவணம்பட்டி கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும், குழந்தையின் தலை, உடம்பு உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், குழந்தையின் தாயார் ரூபிணி, தமிழ்ச்செல்வன் என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது.
ரூபிணி கணவரை பிரிந்து தமிழ்செல்வனுடன் சரவணம்பட்டி பகுதியில் வசித்து-வந்துள்ளார். இந்நிலையில், குழந்தை தேவிஸ்ரீ அவர்களின் உறவுக்கு இடையூறாக இருந்ததால் விஷம் கலந்த பிஸ்கட் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குழந்தை தேவி ஸ்ரீ தலையில் காயம் இருப்பதால். உடற்கூறாய்வு முடிவில்தான் எப்படி கொலை நடந்தது என்பது தெரியவரும். இதனிடையே, குழந்தையின் தாய் ரூபிணியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
மேலும், மாநகர காவல் ஆணையர் சுமித்திரன், துணை ஆணையர் பாலாஜி சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருக்கும் தமிழ்ச்செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர்.