கோயம்புத்தூர்: ஆலாந்துறையை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (37) - தேவி (31) தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பூளுவப்பட்டி பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜன.4) காலை இருவரும் வேலைக்குச் செல்வதற்காக சிறுவாணி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆலாந்துறை அரசு பள்ளி அருகே அரசு பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. பேருந்து மோதியதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பேருந்துடன் சரண்டைந்தார். அதேநேரம் அப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் பயங்கர விபத்து: இருவர் பலி; 25 பேர் படுகாயம்!