கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆயிரங்கால் பீட்டில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக பொருத்தப்பட்ட இரண்டு கேமராக்கள் சேதமாகியிருந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். அப்போது தம்மம்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து நபர்கள் சர்க்கார் பகுதி வனப்பகுதியில் இரண்டு சந்தன மரங்களை வெட்டி இரவில் எடுத்துச் செல்லும்போது கேமரா பிளாஷ் லைட் இயங்கியதால் கேமராவை வெட்டி எடுத்து புதர் மறைவில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு முதலில் இரண்டு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின் அவர்களை அழைத்துச்சென்று வனப்பகுதியில் தேடி ஒரு கேமரா மட்டுமே மீட்கப்பட்டது. தலைமறைவாக இருந்து மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, சந்தனமரத்தை வெட்டியதும், கேமரைவை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. தம்மம்பதியை சேர்ந்த மலைவாழ் மக்களான செந்தில், சுள்ளான், உசிலமணி, அய்யப்பன், மணியான் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைந்தனர்.
மேலும், இந்த குற்றச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என விசாரனை நடைபெற்று வருவதாக வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளத்துப்பாக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டியாடியவர்கள் கைது!