கோயம்புத்தூர்: தடாகம் சாலை காளையனூர் பழனி குட்டை பகுதியில் இரண்டு ஜேசிபி இயந்திரம், ஒரு டிப்பர் லாரி கொண்டு மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வடக்கு மண்டல துணை வட்டாட்சியர் சரவணகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் அங்கு சென்ற சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டி ஆகியோர் வாகன ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விவசாயத்திற்காக மணல் எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
வாகனம் பறிமுதல்
அவர்களிடம் சோதனை செய்ததில் மணல் எடுப்பதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று வாகனத்தையும் பறிமுதல் செய்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வாகன ஓட்டுநர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் அனுமதியின்றி மண் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக தடாகம் கனிமவள மீட்புக்குழுவினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திடீரென தீப்பிடித்த அரசு வாகனம்: உயிர் தப்பிய ஊராட்சி குழுத் தலைவர்