கோயம்புத்தூர்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர், அக்கட்சி தலைவர் சரத்குமாரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் இன்று (டிச.13)ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கோவையில் அக்கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதூர் ரஹ்மான் தலைமையில் உக்கடம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மது ஒழிப்பு, பூரண மதுவிலக்கு, போதை பொருட்கள் தடுப்பு குறித்து பதாகைகளை ஏந்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் மது ஒழிப்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில் மதுபானங்களை சாலையில் கொட்டி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உபைதூர் ரஹ்மான், ‘தமிழ்நாட்டில் இளைஞர்கள் மாணவர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். திமுக ஆட்சி வந்த பிறகு மின் கட்டணம் , கோவை மாநகராட்சியில் சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன்?. மத்திய அரசு நாட்டு நலனை பாராமல் மதத்தை பிரித்து அரசியல் செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இந்தியாவை வளப்படுத்த வேண்டுமே தவிற பிரிவினைவாதத்தை உண்டாக்கக் கூடாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'விசிகவை தடை செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சியினர் மனு!