கோவை: கொடிசியா வளாகத்தில் 6-வது புத்தகத்திருவிழா நடைபெற்றுவருகிறது. இதில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று 5,000 பள்ளி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி "திருக்குறள் திரள் வாசிப்பு" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தைச்சேர்ந்த 5,000 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 20 திருக்குறள்களை வாசித்தனர், அதற்கு ஆசிரியர்கள் குறள் விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகப்பேராசிரியர் ராஜாராம் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ - மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த மாவட்ட ஆட்சியர், ’மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேச்சுப் போட்டிகளும் நடைபெற்று உள்ளன. அனைவருக்கும் திருக்குறள் பதிப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரு புத்தகமாக வாங்கிச்செல்வோம்’ என்றார்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவரின் ஓவியம் காவி நிறமாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், 'அது தவறான கருத்து. நார்மலாகத் தான் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அதனைப் பார்வை குழப்பம் என சொல்லலாம். நான் திருக்குறள் புத்தகத்தின் சட்டையைப் பார்க்கவில்லை, அதனுள் எழுதியுள்ளதைத் தான் பார்த்தேன். புத்தகத்தில் அனைத்து நிறங்களும் உள்ளன. அது ஒரு பொக்கிஷம்’ எனப் பதிலளித்தார்.
அட்டுக்கல் விவகாரம் குறித்த கேள்விக்குப்பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் ’அதில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்தவுடன் விளக்கமாகக் கூறுகிறேன்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல' - கையெழுத்து பெறும் தனியார் பள்ளி