கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்-ஸ்லிப் எருமை பாறை பகுதியை சேர்ந்த மலைவாழ் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், நேற்று முன்தினம் (ஜூலை 31) டாப்-ஸ்லிப் பகுதியில் இருந்து சேத்துமடைக்கு வந்துள்ளார். அவருக்கு தேவையான பொருள்களை வாங்கிவிட்டு அருகில் இருந்த அரசு மதுபான கடையில் மது அருந்தியுள்ளார்.
அளவுக்கதிமான போதையால் மயக்க நிலையில் இருந்த கார்த்திகை அடையாளம் தெரியாத நபர்கள் அவரை புகைப்படம் எடுத்து, அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தன் மகனை காணவில்லை என அறிந்த கார்த்திக்கின் தந்தை சேத்துமடை பகுதிக்கு வந்து தேடி பார்க்கும்போது, கார்த்திக் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அதன்பின்னர், கார்த்திக்கை டாப்-ஸ்லிப்பில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அடையாள தெரியாத நபர்கள் சமூக வலைதளங்களில், கார்த்திக் உயிரிழந்ததாக அவதூறு தகவல் வெளியிட்டுள்ளதை அடுத்து, கார்த்திக் மீண்டும் திரும்பியதால் அப்பகுதி மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வனச்சரகர் காசிலிங்கம் இச்சம்பவம் குறித்து, கார்த்திக் இடம் விசாரணை மேற்கொண்டனர். சமூக வலைதளங்களில் உள்ள வதந்திகளை நம்ப வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்