கோயம்புத்தூர் மாவட்டம், நெகமம் அடுத்த கப்பினிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (60). இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ராமராஜ் கடந்த சில நாள்களுக்கு முன்பு தோட்ட வேலை செய்வதற்காக தென்காசியைச் சேர்ந்த சச்சின் என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ராமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், சச்சின் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், இரண்டு வைர வளையல்கள், ஒரு ஜோடி கம்மல், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து, வீட்டிற்கு வந்த ராமராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது திருட்டு சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி பாலாக்காடு சாலையில் நடந்து சென்ற சீதா என்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 5 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இது குறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மும்பையில் ரூ. 12.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!