கோயம்புத்தூர்: அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காரில் சென்று வழி கேட்பதுபோல் நடித்து, விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச் செல்வதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சம்பவ இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில், பதிவான காட்சிகளை வைத்து, காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அன்னூர் - சிறுமுகை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமுகை பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் வெங்கடாசலபதி (24) என்ற இளைஞர் தனது நண்பர்களான வினோத், விக்னேஷ் குமார், மதன் ஆகியோருடன் காரில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்த 5 விலை உயர்ந்த செல்போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சாலையில் நடந்து செல்லும் நபர்களிடம் இவர்கள் காரில் இருந்து வழி கேட்பது போல நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பைக் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய டிப் டாப் திருடன்