கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பொத்தியாம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் உயர் அழுத்த மின்சாரம் சென்றுகொண்டிருக்கும்போதே மின்மாற்றியைக் கழற்றி அதிலிருந்த தாமிரம், அலுமினிய வயர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து மின்சார வாரிய அலுவலர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக துணை கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 4) சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரபாண்டியன் கோயம்புத்தூர் - அவிநாசி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கோட்டைப்பாளையத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (48), கார்த்தி, துடியலூரைச் சேர்ந்த மணிகண்டன் (19), ஒத்தக்கால்மண்டபத்தைச் சேர்ந்த சண்முகம் (55), காரமடையைச் சேர்ந்த சேகர் (47) எனத் தெரியவந்தது.
இவர்கள் கோயம்புத்தூர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம், சூலூர் போன்ற இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகளில் தாமிரம் திருடிய கும்பல் எனத் தெரியவந்தது. இவர்கள் இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதை தொழிலாகச் செய்துவந்ததையும் ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், இவர்களிடமிருந்து வாகனம், இருசக்கர வாகனம், திருடிய தாமிரக் கம்பிகள், அலுமினிய கம்பிகள் போன்றவற்றைப் பறிமுதல்செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பேர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.