கோவை தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ். இவர் கூடங்குளம் போராட்டக் குழுவின் ஆலோசகராக செயல்பட்டுவருகிறார். இவரது மனைவி ஷோபனா நேற்று மாலை பள்ளியிலிருந்து தனது குழந்தையை அழைத்துக் கொண்டு ஆனைக்கட்டி வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டுவந்த இரண்டு இளைஞர்கள் ஷோபனா மீதும், அவரது குழந்தையின் மீதும் மோதினர். இதில், ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது குழந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கட்டி பகுதியில் உள்ள மதுபான கடையினால் அடிக்கடி விபத்து நடந்துவருவதால் ஏற்கனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில், நேற்றும் விபத்து நடந்திருப்பதால் மருத்துவர் ரமேஷ், அவரது குடும்பத்தினர் ஷோபனாவின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து 5 மணிநேரமாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் மதுபான கடையை மூடுவதாக வாக்குறுதியளித்ததையடுத்து மருத்துவர் ரமேஷின் குடும்பத்தினர் உடலை வாங்கி கலைந்துசென்றனர்.