தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளரகள் என முன்களப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே மக்களிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் நோக்கில் பத்திரிகையாளர்களும் அயராமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்தது. மேலும், முன்களப் பணியாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பகுதியின் மாலை மலர் ஊடகத்தின் நிருபராக பணியாற்றி வந்தவர், மணிகண்டன். இவர் தனது தாய், தந்தையை இழந்த நிலையில் தனது சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த நான்கு நாள்களுக்கு முன் காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சையிலிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (மே 11) உயிரிழந்தார்.