இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாகப் பெரும்பாலான தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். 1990ஆம் ஆண்டு ஏராளமான ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்தனர். அவ்வாறு வந்த ஈழத்தமிழர்கள் சிலர் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் ஆழியாரில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் கோட்டூர் பகுதியில் வசித்துவருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களில் வேலைக்கும், இன்னபிற கூலி வேலைகளுக்கும் சென்று வருகின்றனர்.
தற்போது இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து இவர்களிடத்தில் பேசியபோது, தேர்தல் வெற்றி அவர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது. "இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக ராஜபக்ச பிரதமராகப் பொறுப்பேற்றார். இனி அங்கிருக்கும் எங்கள் உறவுகளுக்கு பாதுகாப்பு இல்லை" எனப் புலம்புகின்றார் இப்பகுதி மக்கள்.
இசித்தோர் பர்னத் என்பவர் நம்மிடையே பேசுகையில், "1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடந்த சண்டையினால் நாங்கள் எங்கள் காணிகளை, வீடுகளை இழந்து தமிழ்நாடு வந்தோம். போர் முடிந்த பின்புகூட அங்கு திரும்பும் விருப்பம் இருந்தது. முகாம்களில் எங்களுடன் இருந்த சிலர் இலங்கை திரும்பியுள்ளனர். ஆனால், அவர்களுடைய நிலங்களைச் சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதனால், அவர்களும் ஏன் அங்கே சென்றோம் என வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்கிறார்.
தாங்கள் இழந்த நிலங்கள் திருப்பியளிக்கப்பட்டால் இலங்கை செல்ல விரும்புவதாகக் கூறும் அவர்களுக்கு, ராஜபக்ச ஒருகாலமும் அதைச் செய்ய மாட்டார் என்பது தெரிந்தே இருக்கிறது.
இதையும் படிங்க: இலங்கை பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச புத்த ஆலயத்தில் பதவியேற்பு!