கோயம்புத்தூர்: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் வருகின்ற 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது சரியல்ல. மத்திய அரசு கூறியதால்தான் சொத்து வரியை உயர்த்துகின்றோம் என்று மாநில அரசு கூறுவதும் நியாயமல்ல. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும்.
நுழைவுத் தேர்வு வரவேற்கத்தக்கது: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது. அது மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மாநில அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம். தமிழ்நாட்டில் பயிற்சி நிறுவனங்கள், டியூசன் சென்டர்களை அரசு முறைப்படுத்த வேண்டும். டியூஷன் சென்டர்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை?.
மழலையர் பள்ளிகள் தொடங்குவதற்கு கூட பல்வேறு விதிமுறைகள் இருக்கும் பொழுது, டியூசன் சென்டர்கள் உள்பட பயிற்சி வகுப்புகளை ஏன் வரையறை படுத்தவில்லை? இதை உடனடியாக வரையறை படுத்த வேண்டும். மத்திய அரசுடன் இணைந்து தனியார் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்து டியூஷன் சென்டர்கள் நடத்துவது புதிய கல்விக் கொள்கைக்கு எதிரானது.
பைஜூஸ் புதிய கல்விகொள்கைக்கு எதிரானது: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி விட்டு மத்திய அரசு பைஜூஸ் போன்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவது கல்விக் கொள்கைக்கு எதிரானது. 112 மாவட்டங்களில் நிதி ஆயோக், பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிப்பது மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கையை சிதறடிக்கும் செயல். எனவே மத்திய அரசு இதனை ரத்து செய்ய வேண்டும்.
இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. அங்கு ஏழை எளிய மக்கள் பட்டினி சாவு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதே சமயம் அங்கு பாகுபாடு இல்லாமல் மனித நேயத்துடன் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உதவி செய்யும் பொழுது இலங்கையில் தமிழர்களின் பகுதி மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் உதவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானின் தமிழணங்கு ஓவியம் - அமித் ஷாவிற்கு அறைகூவல்!