தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றதுவருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக தடுப்பூசிக்கு டோக்கன் வழங்கப்பட்டாலும் தடுப்பூசி செலுத்துவதில்லை என்றும், தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக மருத்துவர் கூறுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கடந்த 10 நாள்களாக தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்றும் (ஜுன் 17) தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்பூசிகளை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மேலும், அங்குள்ள பணியாளர்கள் 200 ரூபாய் அளிப்பவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதாகவும் தெரிவித்தனர். கடந்த 10 நாள்களாக இதுபோன்று தினமும் காலையில் வந்து வரிசையில் நின்றால் பத்து மணிக்கு மேல் தடுப்பூசி இல்லை என்று கூறி தங்களை அனுப்பிவிடுவதாகவும் தங்களிடம் 3, 4 டோக்கன்கள் இருந்தும் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் தெரிவித்தனர்.
டோக்கன் இல்லாமல் வரிசையில் நிற்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர்கள் பிறகு எதற்கு டோக்கன்கள் வழங்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி கருமத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தடுப்பூசிகள் ஒதுக்கினால் அதனை கணியூருக்கு அலுவலர்கள் அனுப்பிவிடுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தங்களுக்கு உடனடியாகத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விஜய் தங்கை