கோவையில் பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டு 57வது கூடைபந்து போட்டிகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்திய கடற்படை அணி, பேங்க் ஆப் பரோடா அணி, இந்திய ராணுவ அணி, இந்தியன் வங்கி அணி, வருமானவரித்துறை அணி, சுங்கவரிதுறை அணி, கேரள மாநில மின்சார வாரிய அணி உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன.
இதையும் படிங்க: சச்சின் சாதனையை முறியப்பார் ரோகித் சர்மா? - ஆசிய கோப்பையில் ஒளிந்துள்ள ரகசியம்!
இந்த தொடரின் இறுதி போட்டியானது நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இந்த போட்டியில் வருமானவரித்துறை அணி, இந்திய இராணுவ அணியை எதிர்கொண்டது. போட்டியை அதிரடியாக தொடங்கிய சென்னை வருமானவரித்துறை அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் பாதி நேர முடிவில் 43-க்கு 39 என்ற கணக்கில் வருமானவரித்துறை அணி முன்னிலை வகித்தது.
ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல கடைசி நேரத்தில் 75-க்கு 71 என்ற கணக்கில் சென்னை வருமானவரித்துறை அணி இந்திய இராணுவ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.
முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் மற்றும் பி.எஸ்.ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: Asia Cup 2023: வெற்றியுடன் ஆசிய கோப்பையை தொடங்கிய பாகிஸ்தான்!