கோவை: நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை கடந்த 32 ஆண்டுகளாக சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி, வாழ்வாதார உதவிகளைச் செயல்படுத்திவருகின்றது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி கோரி கோரிக்கை அனுப்பி வந்தனர்.
இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனம் உதவ முன் வந்ததையடுத்து கரோனா முதல் அலையின் போது 6 ஆயிரத்து 750 குடும்பத்தினர்க்கு உணவு, சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.
தற்போது கரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் உதவ முன்வந்த ராயல் என்பீல்ட் நிறுவனத்தினர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை, திருப்பூர், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள 30 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது.
இதன் தொடக்கவிழா நெகமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.முதல் கட்டமாக நெகமம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் பெட்டிகள், எக்ஸ்ரே, இசிஜி கருவிகள் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் பொருந்திய அனைத்து வசதிகளும் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றையும் சுகாதார நிலையத்திற்கு வழங்கினர். அப்போது காணொளி வாயிலாக உரையாற்றிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மருத்துவத் துறையினருக்கு உதவி வரும் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் சண்முகம், நெகமம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் சபரி கார்த்திகேயன், நேட்டிவ் மெடிக்கல் கேர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏ எஸ் சங்கரநாராயணன்,மருத்துவமனை அலுவலர்கள் ,செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.