கோவை டாடாபார் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கோவை சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் தொடர்ந்து திமுகவினர் நடத்தும் கிராமசபை கூட்டங்கள் தெருமுனை பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை காவல் துறையினர் திட்டமிட்டுத் தடுத்து வருகின்றனர்.
கட்சி தொண்டர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். ஆனால் அதிமுகவினர் அனுமதி இல்லாமலேயே பொது இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய பேனர்கள் அமைத்து வருகின்றனர். காவல் துறையினரின் போக்கை கண்டிக்கும் வகையில் திட்டமிட்டபடி சரியாக மாலை 4 மணியளவில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இன்றுகூட பல இடங்களில் செக்போஸ்ட் அமைத்து காவல் துறையினர், திமுக ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்பதற்காகக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்று திமுக நிர்வாகிகள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை மேற்கொண்டால் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.