கோயம்புத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் கட்டுமானங்கள் உள்ளன. அவற்றில் பல யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வலசை செல்லும் யானைகள் அங்கிருந்து விலகி ஊருக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது. அதன் காரணமாக யானை-மனித மோதல் நடப்பதும். உயிரிழப்பும் ஏற்படுகிறது. சில இடங்களில் யானை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டத்தில்தான் அதிக மனித-மிருக மோதல் நடைபெறுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம், அதன் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

கேரளாவில் இருந்து ஆனைகட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் கல்லாறு வழியாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கும், தெங்குமரடா வழியாக கர்நாடக-கேரளா வன பகுதிகளுக்கும் யானைகள் ஆண்டுதோறும் வலசை செல்வது வழக்கமாக உள்ளது. இந்த யானைகள் செல்லக்கூடிய வலசை பாதையில், கான்கிரீட் கட்டடங்கள் அதிகமாக கட்டப்பட்டுள்ளதால் வழி மாறிய யானைகள் ஊருக்குள் வருகிறது. தற்போது யானை வழித்தட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்டிப்பாக உள்ளதால், யானை வழித்தடங்களில் உள்ள மின் வேலிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளது.

யானைகளின் முக்கிய வலசை பாதையான கல்லாறு யானை வழித்தடத்தில் கல்லாறு பழப்பண்ணை உள்ளதால் அதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பழப்பண்ணை நிரந்தரமாக மூடப்பட உள்ளது. இதற்கு மாற்றாக சிறுமுகைப் பகுதியில் வனத்துறை சார்பில் 20 ஏக்கர் நிலம் தோட்டக்கலைத் துறைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு தோட்டக்கலை பண்ணை, ஆங்கிலேயர்களால் 1,900 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பழப்பண்ணை, கடல் மட்டத்தில் இருந்து 360 மீட்டர் உயரத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
மிதவெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட இப்பண்ணையில் பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள், மலேசியாவை தாயகமாகக் கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்புட்டான், இலவங்கப்பட்டை, எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள் மற்றும் பலா உள்ளிட்ட பல்வேறு வகையான பழ மரங்கள் வாசனை திரவிய பயிர்கள், அலங்காரச் செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்சோரா, அரிக்கா பனை மற்றும் பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பழப்பண்ணையில் தயாரிக்கப்படும் நாற்றுக்கள், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் யானைகள் வழித்தடமான கல்லாறு மற்றும் யானைகள் சாலையை கடந்து செல்லும் கோத்தகிரி சாலை ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.
இந்த நீதிபதிகள் குழுவினரின் அறிவுரையின்பேரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இது தவிர யானைகள் வழித்தடத்தில் உள்ள கல்லாறு பகுதியில் பல அதிரடி நடவடிக்கைகளுக்கான உத்தரவை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையை மூடிவிடவும், பழ பண்ணை இருக்கும் இடத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், “நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கல்லாறு பழப்பண்ணையை மூடுவதால் யானைகளின் வழித்தடம் காப்பாற்றப்படும். அது ஒரு புறம் இருக்க, யானை வழித்தடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ளதாலும் யானைகள் இடம் மாறி செல்வது தொடர்கிறது. ஆகவே கல்லாறு பழப்பண்ணையைபோல் தனியார் நிறுவனங்கள் கட்டியுள்ள கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் யானையின் பாதை முழுமையாக இருக்கும்” என தெரிவித்தனர்.
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறுகையில், “ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த பண்ணைக்கு தற்போது 122 வயதாகிறது. மித வெப்ப சீதோஷ்ண நிலையில் வளர்ந்த அரிய வகை மரம், செடி, கொடிகள் மற்றும் பூச்செடிகள் ஆகியவை வேறு எங்கும் வளராது.
கல்லாறு பழப்பண்ணையில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நாற்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பழப்பண்ணைக்கு வந்து அரிய வகை மரம், செடி, கொடிகளைக் கண்டு களப்பணியில் பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அரிய வகை மரம், செடி, பழ வகைகளை இமாச்சலபிரதேசத்தில்தான் காண முடியும். கல்லாறு பழப்பண்ணை மாற்று இடத்தில் அமையும் பட்சத்தில், இந்த செடிகள், மரங்கள் எப்படி வளருமா என்பது தெரியாது. யானைகளுக்கு தொந்தரவு இல்லாமல் இங்கேயே இருந்தால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்று கூறினர்.
இதையும் படிங்க: வீடியோ: யானையிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய விவசாயி... 1.5 மணிநேரம் தவிப்பு...