கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்று வரை ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் மிக முக்கிய மருத்துவ கருவி வெண்டிலேட்டர்கள். ஆனால் தற்போது உள்ள சூழலில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் இருத்தல் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதாலும் வெண்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெண்டிலேட்டர்களை தயாரித்து தர முன்வந்துள்ளனர். சாதாரணமாக அவசரகால வெண்டிலேட்டர்களின் குறைந்தபட்ச விலை எட்டாயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும். இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டியில் இயங்கிவரும் ஹைடெக் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்னும் நிறுவனம் ஐந்தாயிரம் ரூபாய் என்ற குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை தயாரிக்க முன்வந்துள்ளது.
தற்போது ஒரு வெண்டிலேட்டர் மட்டுமே தயாரித்துள்ள அந்நிறுவனம் அரசு மருத்துவமனைக்கு வழங்கி அங்கு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, இதை உபயோகிக்கலாம் என்று சான்று அளித்தவுடன் அதிகளவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஹைடெக் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் பேசியதாவது,
"கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு குறைந்த செலவிலான வெண்டிலேட்டரை தயாரித்துள்ளோம், வெளிநாடுகளில் அதிகப்படியான மக்கள் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள் இல்லாமல் தவித்துவரும் நிலை நம்மக்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.
தற்போது ஒரு வெண்டிலேட்டர் கருவியை தயாரித்துள்ளோம் இதை அரசு மருத்துவமனைக்கு சோதனை செய்வதற்கு அளித்து மருத்துவர்கள் இதை பயன்படுத்தலாம் என்று கூறினால் மேற்கொண்டு அதிகப்படியான வெண்டிலேட்டர் கருவிகளை தயாரிக்க உள்ளோம்.
ஒரு நாளைக்கு குறைந்தது 50 முதல் 100 கருவிகளை தயாரிக்க முடியும் அதற்கான வசதிகள் எங்களிடம் உள்ளதால் அதிகபடியான வெண்டிலேட்டர் கருவிகளை தயாரித்து அரசிற்கு குறைந்த தொகைக்கு அளிப்பதற்கு தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் பார்க்க: கரோனா: செவிலியர்களுக்கு உதவும் புதிய கருவி!