கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஏறாமல் இருக்க முயற்சித்த போது புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அன்னூர் வழியாக கோவை மாநகருக்கு செல்லும் ராஜம் என்ற தனியார் பேருந்து, சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகள் உடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தை ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்து அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது அங்கு சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநர் பைக் மீது பேருந்து ஏறாமல் இருப்பதற்காக சாலையோரம் திருப்பினார். இதனால் பேருந்து ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலில் பைக்கில் பயணித்தவர் உள்பட பேருந்து பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் பேருந்தை அங்கேயே விட்டு தப்பி ஓடினார். அதன்பின் பொதுமக்கள் அன்னூர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பலர் ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்திரும் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காயமடைந்தவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவமனையில் சற்று நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதன் பின் தாமதமாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 62 பேர் காயம்