கோயம்புத்தூர் மாவட்டம், இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர், சுஜய் (27). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனைவி ரேஷ்மாவுடன் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கவுரிநகரில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். ரேஷ்மா 8 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கடந்த மே 2ஆம் தேதி இவரது வீட்டிற்கு கல்லுாரி மாணவி ஒருவர் வந்துள்ளார். சுஜய்க்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பார்ட்மென்டில் இருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுஜய்யின் வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுஜயையும், ரேஷ்மாவையும் மகாலிங்கபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது, ''கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுஜய்யும், ரேஷ்மாவும் காதலித்துள்ளனர். இருவரது பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்ததால் சுஜய், ரேஷ்மா தற்காலிகமாகப் பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் சுஜய், அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரை காதலித்துள்ளார்.
சுப்புலட்சுமி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சுஜய் முன்னாள் காதலியான ரேஷ்மாவுடன் திருமணம் செய்து, பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டிக்கு வந்து தனியாக குடும்பம் நடத்தி வந்தார். சுஜய் அடிக்கடி சுப்புலட்சுமி உடன் ரகசியமாக செல்போனில் பேசியும் வந்துள்ளார். இந்நிலையில்தான் சுப்புலட்சுமி கடந்த மே 2ஆம் தேதி, சுஜய்யை சந்திக்க பொள்ளாச்சி வந்துள்ளார்.
சுஜய்யின் வீட்டுக்குச் சென்ற போதுதான் சுஜய்க்கும், ரேஷ்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது தெரிந்து, சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது சுப்புலட்சுமிக்கு ரேஷ்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த தகராறின் உச்ச கட்டத்தில் ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா அருகே இருந்த கத்தியை எடுத்து சுப்புலட்சுமியின் உடலில் ஒன்பது இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
சுஜய்யும், ரேஷ்மாவும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுப்புலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். சுப்புலட்சுமியை கொலை செய்துவிட்டு தலைமறைவான சுஜய் மற்றும் ரேஷ்மாவை தேடுவதற்கென நான்கு தனிப்படை போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் இருந்த சுஜய் மற்றும் ரேஷ்மாவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் இயக்க மாநிலச் செயலாளர் கொலை வழக்கு - சிறுவன் உள்பட 6 பேர் கைது!