pongal: கோவை: தமிழ்நாட்டில் யானைகள் வளர்ப்பு முகாம் ஊட்டி தெப்பகாடுக்கு பிறகு, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் கோழிகமுத்தி, வரகளியாறு என இரு யானைகள் வளர்ப்பு முகாம்கள் உள்ளன. அதில், கோழிகமுத்தி எனும் மிகவும் பிரபலமான இந்த யானைகள் முகாமில் 26 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதில் கபில்தேவ், கலீம், அரிசி ராஜா ஆகிய 3 கும்கி யானைகள் சத்தியமங்கலம் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த சென்று விட்டதால், தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு யானைகள் பொங்கல் விழா யானைகள் வளர்ப்பு முகாம் கோழிகமுதியில் இன்று(ஜன.16) நடைபெற்றது.
அதையடுத்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு யானைகளுக்கு பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. பின்னர் முகாம் அருகே உள்ள விநாயகர் முன்பு பூஜை நடைபெற்றபோது யானைகள் மண்டியிட்டு விநாயகரை வணங்கியதை அனைவரும் வியப்பாக பார்த்தனர்.
தற்போது யானைகள் வளர்ப்பு முகாமில் பாகன்கள் 10 பேர் தாய்லாந்துக்கு யானைகளுக்கு பயிற்சிக்கு சென்றுள்ளனர். மேலும் ஈரோடு பகுதியில் காட்டு யானை பிடிக்க மூன்று காட்டு யானைகள் சென்றுள்ளதால் வழக்கமாக நடைபெறும் டாப்சிலிப்பில் உள்ள புல்மேட்டில் இந்த ஆண்டு யானை பொங்கல் நடைபெறவில்லை என தெரிகிறது.
யானை பொங்கலை காண ஆவலாய் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. வரும் வருடங்களில் டாப்சிலிப்பில் யானை பொங்கல் நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் ஆனைமலை புலிகள் துணை காப்பக கள இயக்குனர் பார்கவ தேஜா, உதவி வனபாதுகாவலர் செல்வம், வனசரகர்கள் புகழேந்தி, மணிகண்டன், சுந்தரவேல் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை பாகன்கள், மாவூத் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். யானை பொங்கல் டாப்ஸ்லிப்பில் நடத்தாமல் கோழிகமுத்தி முகாமில் நடத்தியதால் சுற்றுலாப் பணிகள் குறைவாகவே இருந்தனர்.
இதையும் படிங்க:சேவல் சண்டை: தடையை மீறி சேவல் சண்டை- அநியாயமாக பறிபோன இரு உயிர்கள்!