கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் அருகில் கமலிகா சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டது. கடை தொடங்கி இன்றோடு 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது.
அதைக் கொண்டாடும்வகையிலும், கடையின் உரிமையாளர் சரவணகுமார் தனது மகன் பெயரில் புதிதாகத் தயாரிக்கப்படும் யுவராஜ் வேட்டிகளை அறிமுகப்படுத்தும் வகையிலும் பொதுமக்களுக்கு சலுகை ஒன்றை அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (டிசம்பர் 14) ஒருநாள் மட்டும் வேட்டி 10 ரூபாய்க்கும், சேலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் பரவியதும் இன்று காலை முதலே கடைக்கு முன்பாக ஆண்களும் பெண்களும் குவியத் தொடங்கினர்.
துணிக்கடையின் உரிமையாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவராஜ் வேட்டிகளை லயன்ஸ் சங்க நிர்வாகி ராஜசேகர் அறிமுகம் செய்துவைத்தார். ரூ.10-க்கு வேட்டி விற்பனையை கே.எம். சாரீஸ் உரிமையாளர் கமருதீன் தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதாலும், கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாலும் நகராட்சி நிர்வாகம் கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்தது.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமனுடன் சு. வெங்கடேசன் சந்திப்பு: பின்னணி என்ன?