கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் அமைந்துள்ள மேற்கு காவல் நிலையத்தின் பின்புறம் 1980ஆம் ஆண்டு காவலர்களுக்காக 255 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்துவந்தன. கடந்த 40 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அக்குடியிருப்புகள் இடிந்துவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடியிருப்புகளிலிருந்த காவலர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பழைய கட்டடங்களை அகற்றி புதிய காவலர் குடியிருப்பு கட்ட தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்து வந்தனர். தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. அருளரசு இக்குடியிருப்புகள் பற்றி தெரிந்துகொண்டதும், உடனடியாக குடியிருப்பு பகுதிகளை ஆய்வுமேற்கொண்டார்.
![பழுதடைந்த காவலர் குடியிருப்புகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9738579_thum.jpg)
ஆய்விற்குப் பின்னர் விரைவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். முதல் கட்டமாக, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய சார்பில் உதவி செயற்பொறியாளர் கே. சீனிவாசன் தலைமையில் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து அகற்ற பொது ஏலம் நடைவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதையொட்டி, பொது ஏலத்தில் பங்கேற்க கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்திலிருந்து ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.