கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்தச்சூழ்நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்க சந்தைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பள்ளி மைதானம், பேருந்து நிலையங்களில் அரசு சார்பில் தற்காலிக காய்கறிச் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன.
அதன்படி பொள்ளாச்சியில் இயங்கி வந்த உழர் சந்தை, காந்தி வாரச்சந்தை, தேர்முட்டி தினசரி சந்தை ஆகியவை மூடப்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறும்போது, ஒரே இடத்தில் மக்கள் அதிகமானோர் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இறைச்சி, மளிகை காய்கறி கடைகளில் கூட்டம் கூடாமல் இருக்க தற்காலிக காய்கறிச்சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அண்ணா மார்க்கெட்டுக்கு சீல்: அதிரடி காட்டிய அலுவலர்கள்!