பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி, கூமாட்டி, கல்லாறுகுடி, சங்கரன்குடி, நெடுங்குன்று, கவர்க்கல், பாலகிணாறு, வெள்ளிமுடி, நாகருத்துபதி, சர்க்கார்பதி பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்
தற்போது கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவின் காரணமாக, பழங்குடி மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அல்லாடிவருகின்றனர்.
எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியே நடந்து சென்று, அதன் பின் பேருந்தில் பயணம் செய்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவர். இந்நிலையில் தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தங்கள் நிலை குறித்து பழங்குடி மக்கள் கூறுகையில் , நவமலை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 5000க்கும் மேற்பட்டோர் காலம் காலமாக பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். அருகில் உள்ள பொள்ளாச்சி, கோட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் கூலி வேலைக்குச் சென்று வருகிறோம்.
தற்போது, போக்குவரத்து இல்லாததால் அத்தியாவசியப் பொருட்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் அல்லாடி வருவதாகவும், அரசு தரும் ரேஷன் பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதில்லை, ஒரு சிலருக்குக் குடும்ப அட்டை இல்லாததால் தங்களுக்கு வரும் ரேஷன் பொருட்களை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்துவருவதாகக் கூறினர்.
எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: “வைரஸால் அல்ல... வயித்து பசியால் இறந்து விடுவோம்” - கிராம மக்கள் வேதனை!