தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நேற்று(ஆகஸ்ட் 5) பொள்ளாச்சி வழியாக, கேரள மாநிலம், கோழிக்கோடு துறைமுகத்திற்கு மரங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை பாவூர்சத்திரம் - கடையத்தைச் சேர்ந்த பொன்துரை என்பவர் ஓட்டிவந்தார்
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதி, கிருஷ்ணா குளம் அருகில், டாரஸ் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
இதையடுத்து, தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், குடியிருப்புப் பகுதியில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். பின் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, டாரஸ் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் கூறுகையில், 'தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு, ஜமீன் ஊத்துக்குளி வழியாக கேரளாவிற்குச் செல்ல டாரஸ் லாரியை ஓட்டுநர் வளைவில் திருப்பும்போது ஓட்டுநர் கட்டுபாட்டையிழந்த லாரி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிட்டது.
குடியிருப்புப் பகுதியில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது' எனத் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியில் ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.