பொள்ளாச்சி கோவை சாலையிலுள்ள வடக்கிபாளையம் பிரிவு அருகே அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என நீண்டநாள்களாக கோரிக்கை வைத்துவந்தனர். இந்த கோரிக்கையை அரசு கருத்தில் கொண்டு, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. சாலை விரிவாக்கப்பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ள நிலையில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன் பணிகள் நடைபெறவுள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். ஆனால், இதுநாள் வரை அரசுக்கு எவ்வித ஆலோசனையும் ஸ்டாலின் வழங்கியதில்லை. நாளிதழ்களில் தனது செய்தி வரவேண்டும் என்பதற்காக நாள்தோறும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறிவருகிறார்.
பொதுமக்கள் முதலமைச்சரை பாராட்டுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்டாலினுக்கு சரியான நேரத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்" என்றார். இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவையில் வணிகர்கள் கடையடைப்பு!