தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை அமைத்து தீவிரம் காட்டிவந்தனர். தற்போதுவரை தமிழ்நாட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் சோதனைச் சாவடியில் இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியிலிருந்து கேரளாநோக்கிவந்த சொகுசு காரை நிறுத்தியபோது, அந்தக் கார் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் கோபாலபுரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அந்தக் காரை பின்தொடர்ந்து சென்று, கோபாலபுரம் அருகே காலை மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து காரை சோதனையிட்டதில் அதில் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் ரூ.29 ஆயிரம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், காரை ஓட்டிவந்த நபரையும் கைது செய்து விசாரித்தனர். அதில் அந்த நபர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் அனீஸ் என்பதும் தெரியவந்தது.பின்னர், அவரை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பழனி பகுதியிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி கேரளாவில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காகக் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அனீஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.