கோயம்புத்தூர்: 36 வார்டுகளைக் கொண்ட பொள்ளாச்சி நகராட்சியில், 32 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் அதிமுகவும் ஒரு வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இன்று (டிச.23) பொள்ளாச்சி நகராட்சியின் சாதாரண நகர மன்றக் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் மற்றும் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் 7ஆவது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் நர்மதா கண்ணுச்சாமி, தனது பதவியை நகராட்சி கூட்ட அரங்கில் ராஜினாமா செய்யப்போவதாக இருந்தார். ஆனால், கூட்டத்தில் 47 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. மேலும் அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அக்கூட்டம் வெறும் 5 நிமிடங்கள் கூட நடைபெறாத நிலையில், நகராட்சி ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை நர்மதா கண்ணுச்சாமி வழங்கினார். இதனையடுத்து பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர்கள், பங்கேற்ற நகராட்சியின் சாதாரண மன்றக் கூட்டத்தில், நகர மன்றத் தலைவரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அவர்கள் ‘பட்டை நாமம் போடும் திமுக தலைவர்’ என்றும் கோஷம் இட்டனர். இதனால், பதிலுக்கு திமுகவினரும் கோஷம் எழுப்பி உள்ளனர்.
ராஜினாமா செய்யக் காரணம் என்ன? நர்மதா கண்ணுச்சாமிதான், நகர மன்றத் தலைவராக முன்மொழிவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய பொள்ளாச்சி திமுக நகரச்செயலாளர் நவநீத கிருஷ்ணனின் மனைவி சியாமளா நகர மன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனாலேயே நகர மன்றக் கூட்டத்திலும், கட்சிக் கூட்டத்திலும் நர்மதா கண்ணுச்சாமி பங்கேற்காமல் தவிர்த்து வந்துள்ளார். மேலும் தனது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகளையும் நகர மன்றத் தலைவர் தடுத்து வருவதாக கட்சி நிர்வாகிகளிடமும் கூறி வந்துள்ளார்.
இதையும் படிங்க: தெருவிற்கு உதயநிதி பெயர் : கரூரில் நடப்பது என்ன?