கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நரிக் கல்பதியைச் சேர்ந்த பாலன்-தேவி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்து ஆறு நாள் ஆன நிலையில் அக்குழந்தை கடத்தப்பட்டது. பிறந்து ஆறு நாள் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தை கடத்திய பெண்ணை தனிப்படை காவல் துறையினர் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்நிலையில், உடுமலை அருகே உள்ள குறிச்சிக் கோட்டையில் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை குழந்தையுடன் காவல் துறையினர் கைது செய்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அப்பெண் குறிச்சிக்கோட்டை ரங்கசாமி என்பவரது மனைவி மாரியம்மாள் என்று தெரியவந்தது. மேலும், திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த மாரியம்மாள் கடந்தாண்டு கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், அவருக்குப் குறை பிரசவத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை இறந்துவிட்டதால், கணவர் உறவினர்களுக்குப் பயந்து மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை எடுத்துச் சென்றுவிடலாம் என்று எண்ணி அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தினார் என்பதும் தெரியவந்துள்ளது.
குழந்தை கடத்தப்படுவதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதையடுத்து குழந்தையை மீட்ட காவல் துறையினர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்டு 10 மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.