இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் போல பொள்ளாச்சி ரயில் நிலையத்தைத் தகர்க்க குண்டு வைத்துள்ளதாக நேற்று (ஏப்ரல் 27) நள்ளிரவு காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரிவித்து தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லாததால் திரும்பிய காவல் துறையினர், அவசர எண் இணைப்பு எண்ணிற்கு அழைத்து பொய்யான தகவல் தெரிவித்தது யார் என்பது குறித்து தொலைபேசி எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதனைச் செய்தவர் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு விவேகானந்த காலனியைச் சேர்ந்த கடலை வியாபாரி ருக்மாங்கதன் என்பது தெரியவந்தது.
![பொள்ளாச்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img_20190428_1109181556433609389-81_2804email_1556433620_456.jpg)
இதனையடுத்து, இன்று காலை காவல் துறையினர் அவரை கைது செய்து தொடர்ந்த விசாரணை நடத்தினர். அதில், ருக்மாங்கதனின் நெருங்கிய நண்பர் சிவராஜ் என்பவர் இலங்கையிலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் குடியேறியவர் என்பதும், நேற்று இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சிவராஜை காவல் துறையினரிடம் சிக்க வைப்பதற்காகத்தான் தவறான தகவலைச் சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அவர்மீது,
- பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்,
- பொய்யான தகவலைப் பரப்பி அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்
உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ருக்மாங்கதனை காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.