கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 36 சென்ட் நிலம் இஸ்லாமியர்கள் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அரசு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்துக்கு அருகே தனியார் தோட்டத்து உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி இஸ்லாமியர்கள் வட்டாட்சியருக்கு கோரிக்கை விடுத்ததின் பேரில் வட்டாட்சியர் அந்த இடத்தை அளந்து இஸ்லாமியர்களுக்கு உண்டான இடத்தை ஒதுக்கீடு செய்தார்.
இந்த நிலையில் நேற்று இஸ்லாமிய பெண் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை அங்கு அடக்கம் செய்துவிட்டு மறுநாள் சடங்குகள் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது மயானத்துக்கு அருகே உள்ள தோட்டத்திலிருந்து வெளியேறிய தண்ணீரால் அடக்கம் செய்யப்பட்ட இடம் மூழ்கியிருந்துள்ளது.
அதனைக் கண்டித்து அப்பகுதியில் திடீரென 300-க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, மயானத்துக்கு அருகே உள்ள தோட்டத்திலிருந்து தண்ணீர் அடக்கம் செய்யும் இடத்துக்கு விடக்கூடாது, மயானத்தைச் சுற்றிலும் வேலிகள் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி கீர்த்திவாசன், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் இஸ்லாமியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் சாலைமறியலை கைவிட்டு கலைந்தனர். இதனால், பொள்ளாச்சி டாப்ஸ்லிப் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி