கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகப் பகுதியில் உள்ள ஆழியார் அணையையொட்டி வனப்பகுதி உள்ளது. இங்கிருக்கும் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு சாலைகளைக் கடந்து செல்வதுண்டு.
இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில், ஆதாளி அம்மன் கோயில் செல்லும் வால்பாறை சாலையில் அணையின் பின் பகுதியில் தண்ணீர் அருந்த வந்த காட்டு யானை, அணையில் நீச்சலடித்ததை அவ்வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை சாலையைக் கடக்கும் வரை, சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் எனத் தெரிவித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ' வால்பாறையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து ஓய்ந்துள்ளதால் கொசுக்கடி தாங்காமல் வனத்தை விட்டு வெளியேறும், காட்டு யானை நவமலை வழியாக சாலையைக் கடந்து அணையில் தண்ணீர் அருந்த வருகிறது. இதனால், யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக' தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு விவகாரத்தில் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்வி - மக்களவையில் காரசார விவாதம்