பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதன்மையாக தென்னை சாகுபடி இருந்து வருகிறது. இந்த தென்னை சாகுபடியில் கடந்த சில நாட்களாக சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் தென்னையில் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் தென்னை மரங்களை நாசம் செய்யும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை விஞ்ஞானிகள், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சுருள் வெள்ளை ஈக்களை அழிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இரவு நேரங்களில் பரவக்கூடிய ஈக்களை அழிக்க விளக்குப்பொறி வைக்கவும், பகல் நேரங்களில் வரக்கூடிய ஈக்களை அளிக்க மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி வைக்கவும், விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும் வேளாண்மை பல்கலைக்கழகம் பூச்சியியல் துறை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட எல்கால்சியா என்ற ஒட்டுண்ணியையும், பச்சைக் கண்ணாடி இறக்கைப் புழுக்களை தென்னை மரங்களுக்கு ஊடுருவச் செய்வது, மேலும் தென்னை ஓலைகளில் கரும் பூஷணம் படரச்செய்து, தென்னை ஓலைகள் நாசம் ஆவதைத் தடுக்க மைதா மாவு கரைசலைத் தெளிப்பது உள்ளிட்ட பல்வேறுத் தகவல்களை தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தென்னை விவசாயிகளுக்கு செயல்விளக்கமாக சொல்லிக்கொடுத்தனர். இதைத்தொடர்ந்து எல்காசியா ஒட்டுண்ணியை தென்னை மரங்களுக்கு விடும் பணியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் !!