கோவை பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி அவர்களிடம் பணம் பறித்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி, அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள அதிமுக பிரமுகர் பார் நாகராஜ், திமுக பிரமுகரான தென்றல் மணிமாறன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதையடுத்து, பார் நாகராஜ் இன்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். சுமார் நான்கரை மணி நேர விசாரணைமுடிந்துவெளியேவந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, காவல்துறையினர் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதாகவும், எந்த சமயத்தில் அழைத்தாலும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், தொழில் ரீதியாகவும் தனக்குள்ள பிரச்னைகள் குறித்தும் விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். காவல்துறை விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து கூறமுடியாது எனவும், தனக்குத் தெரிந்த தகவல்களை கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.