கோயம்புத்தூர் மாநகரில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரண்டு தேதிகளில் பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு கொலை சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 12.02.2023 மற்றும் 13.02.2023 ஆகிய தேதிகளில் பந்தய சாலை காவல்நிலைய எல்லைக்குபட்ட பகுதியில் இருவேறு கொலை சம்பவங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடி அணிகளுக்கு (Gang) இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்கனவே நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்த இரண்டு கொலை சம்பவங்களும் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
மேற்கொண்டு விசாரணையில் மேற்படி இரு கொலை சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு வாகனத்தணிக்கை, விடுதி தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அதன் படி கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தில் ரவுடி செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 36 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது, 19 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், 5 கத்திகளும், கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் வடக்கு மாவட்டத்தில் ரவுடி செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 28 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது, 14 ரடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரங்கள் பெறப்பட்டுள்ளது ஆக மொத்தம் கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 64 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது, 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், 5 ஆயுதங்களும், கைப்பற்றப்பட்டுள்ளன.
ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எந்த வித பாரபட்சமின்றி மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்; பெங்களூர் விரைந்த தனிப்படை போலீசார்