கோயம்புத்தூர்: பேரூர் மத்துவராயபுரம் நல்லூர் வயல் பகுதியில் திறந்த வெளியில் சடையாண்டியப்பன் கோயில் அமைந்துள்ளது. அங்கு சடையாண்டியப்பன் சாமி சிலை மற்றும் பெண் காவல்தெய்வச் சிலைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று (நவ.23) அக்கோயிலில் இருந்த 2.5 அடி உயர சடையாண்டியப்பன் சாமி சிலை மாயமாகியுள்ளது.
இதனை அக்கோயிலுக்கு விளக்கேற்ற வந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கண்டறிந்து காருண்யா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தற்போது கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வருகின்றனர்.
உடனடியாக காவல்துறையினர் இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு சிலையை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் சிலை திருட்டில் ஈடுப்பட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோயில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியின கிராம மக்களுக்கு குலதெய்வமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை: ரூ.6 கோடியில் நாட்டின் முதல் இன்ஜினியரிங் மியூசியம்!