கோவை: மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'கடந்த 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைகோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் மாருதி 800 காரில் 2 எல்.பி.ஜி சிலிண்டர்கள் உட்பட ஒரு சில டிரம்ஸ் ஏற்றி வந்த கார் வெடித்துச்சிதறியதில் வாகனத்தை ஓட்டிவந்த உக்கடம் பகுதியைச்சேர்ந்த முபின் தீக்காயங்களுடன் உயிரிழந்தார்.
அதன்தொடர்ச்சியாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளபட்டு தடயங்களைப் பாதுகாத்து தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து, கைரேகைப்பிரிவு, மோப்ப நாய் பிரிவு என அறிவியல் பூர்வமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 12 மணி நேரத்தில் இறந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனம் 10 உரிமையாளர்களைத் தாண்டி வந்துள்ளது. அதனையையும் உடனடியாக கண்டுபிடித்துவிட்டோம்.
இதில் 6 தனிப்பிரிவுகள் பணியாற்றி உள்ளனர். சம்பவ இடத்தை டிஜிபி, ஏடிஜிபி ஆகியோரும் பார்வையிட்டனர். நேற்று 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். FIR-ல் 174, 3a என இருந்ததை தற்போது UAPA(சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முபின் இறந்ததைத்தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய கூட்டு சதியைத்தெரிந்துகொண்டு அதற்கான பிரிவு 120b மற்றும் 153a, UAPA பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று(அக்.25) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதுசம்பந்தமாக 20 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை, இது சம்பந்தமாக வரப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் புதிய நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கார் வெடிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான், காவலர்கள் அங்கிருந்த கோயிலில் சோதனை மேற்கொண்டு சென்றுள்ளனர். கார் வெடித்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்து, மேலும் சேதங்கள் ஏற்படாத வண்ணம் செயல்பட்டுள்ளனர்.
இதில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்றும் புலன் விசாரணை செய்து வருகின்றோம். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஒரு சிலர் கேரளா சென்று வந்துள்ளது தெரியவருகிறது. அதே சமயம் எதற்காக சென்றார்கள் என்று தகவல்கள் சேகரித்து வருகிறோம்.
அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரில் இருந்த பொருட்கள் குறித்து தடயவியல் ஆய்விற்கு அனுப்பி உள்ளோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் 3 பேர் (ரியாஸ், நவாஸ், ஃப்ரோஸ்) முபின் வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் சிசிடிவியில் இருந்தவர்கள்.
இவர்கள் மூன்று பேரிடம் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் சல்ஃபர் ஆகியவை 75 கிலோ அளவிற்கு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அனைத்து வழிப்பாட்டு தளங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைது செய்யபட்டவர்களில் தல்கா என்பவர் அல்-உம்மா அமைப்பின் தலைவர் பாட்ஷா-வின் உறவினர் எனத்தெரிய வருகிறது. அது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது’ என்றார்.
இதையும் படிங்க:CCTV: கஞ்சா போதையில் இரவில் வந்து வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்!